“43 வருடங்களுக்கு முன்னரே எங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவரது ஆதரவாளர்கள் ஈரானில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பைடன் பதிலளிக்கும்போது, “கவலை வேண்டாம். நாம் ஈரானை விடுவிப்போம். ஆனால், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
பைடனின் இந்தக் கருத்துக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது, இதுகுறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒன்றை கூறுகிறேன்… ஈரான் 43 வருடங்களுக்கு முன்னரே விடுவித்துக் கொண்டது (ஈரானில் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நடந்தது)” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. மேலும், ஈரான் அரசு வன்முறையை கைவிட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. ஆனால், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.