3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:
”வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தற்போது, வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதியதாக அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.
வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022ஆம் ஆண்டில், கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்”.
இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.