சென்னை: ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள வட சென்னை மேம்பாட்டு திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக சென்னை மாநகராட்சிக்கு சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. மேலும், இரண்டு மண்டலங்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத் தவிர, குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில், பெருங்குடி குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கி ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வட சென்னையில் பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “வட சென்னை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் ரூ.1000 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் வட சென்னையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக முதல் கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்கு நிதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. வட சென்னை குப்பை இல்லாத பகுதியாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை வட சென்னை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. விரைவில் இதற்கான அறிக்கை பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர்கள் கூறினர்.