தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். தற்போது இந்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 7, திருவாரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒமைக்ரான் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ள 11 பேரிடம் யார் யார் தொடர்பில் இருந்தார்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்கள் சென்ற இடங்களில் யார் யாரைச் சந்தித்தார்கள் எனக் கேட்டறிந்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் அவர்கள் திரையரங்குகள், துக்க நிகழ்வுகள், மால்கள், திருமண நிகழ்வுகள் என அவர்கள் எங்கெங்கே சென்றார்கள் எனக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில் ஒமைக்ரான் இன்னும் எவ்வளவு பேருக்குப் பரவியுள்ளது என்பதைக் கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.