கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மூட்டைக்கும், ‘க்யூ.ஆர். கோடு’ வசதி வழங்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம் நடைபெறும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் கொப்பரை உற்பத்தி அதிகம். இந்தாண்டு கொப்பரை விலை சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கொப்பரைக்கு நிர்ணயித்த ஆதார விலையான, கிலோ ரூ.105.90 என்ற விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. தற்போது பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது.
6 சதவீதம் ஈரப்பதம் உள்ள கொப்பரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 216 கிலோ என மொத்தம், 2500 கிலோ கொப்பரையை அதிகபட்சமாக ஒரு விவசாயி விற்பனை செய்ய முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம், 19-ம் தேதி முதல் நேற்று வரை, 19 லட்சத்து 53 ஆயிரத்து 855 ரூபாய் மதிப்பிலான, 184.50 குவிண்டால் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை, தரம் பிரித்து மூட்டைகளில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு மூட்டைக்கும், ‘க்யூ.ஆர். கோடு’ வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:
கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க, ஒவ்வொரு மூட்டைக்கும் ‘க்யூ.ஆர். கோடு’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த விவசாயி கொண்டு வந்த கொப்பரை, யார் கொள்முதல் செய்தது, கொள்முதல் செய்த மையம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். ‘ஆன்லைன்’ வாயிலாக விவசாயிகள் விவரங்கள் அனுப்பப்படுவதால், அவற்றை இந்த க்யூ.ஆர். கோடு உடன் இணைத்து பரிசோதிக்க முடியும். இதனால் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். அத்துடன் தரம் இல்லாத கொப்பரை என புகார் வந்தால், யார் கொண்டு வந்தது என்பதை சரிபார்க்க முடியும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு கொள்முதல் நடைபெறுகிறது.