நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். இதையடுத்து பாலாவின் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின்னர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவானார் சூர்யா.
பாலாவை பொறுத்தவரை அவன் இவன், தாரை தப்பட்டை என்று அடுத்தடுத்து சுமாரான படங்கள் தந்து ஜோதிகாவை வைத்து நாச்சியார் படத்தை இயக்கி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் அவருக்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பெரும் சறுக்கலாக அமைந்தது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான அந்தப் படத்தை தயாரித்தவர்கள் மொத்தமாக பாலாவின் இயக்கத்தை நிராகரித்து, அதே கதையை வேறு இயக்குனரை வைத்து படமாக்கி ஆதித்ய வர்மாவாக அதை வெளியிட்டனர்.
இதனால் பாலா மன உளைச்சலில் இருந்துள்ளார். அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் பாலா இணையும் அறிவிப்பு வெளியானது.
‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவைத் தவிர, கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் பாலா இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சூர்யா 41 படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.