இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது இணைக்கும் கருவியாக இருக்கிறதே அன்றி, பிரிக்கும் கருவியாக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் தகவல் காங்கிரஸ் மாநாடு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த மநாட்டில் 120 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புதுடெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது இணைக்கும் கருவியாக; முன்னேற்றத்தை அளிக்கும் கருவியாக இருக்கிறதே அன்றி, பிரிக்கும் கருவியாக அல்ல. உதாரணத்திற்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கிராமப்புற நிலங்களை அளவிடும் திட்டமான ஸ்வமித்வா(SWAMITVA) திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் நிலங்கள் ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், மக்கள் தங்கள் நிலங்களின் அளவை துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புகள், புவிசார் தொழில்நுட்பத்திற்கான முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின் தெற்காசிய செயற்கைக்கோள், அண்டை நாடுகளுடனான தகவல்தொடர்புகளை எளிதாக்குகிறது.
இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் தகவல்தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு திரட்டப்பட்டு அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. விண்வெளி துறை, ஆளில்லா விமான துறை, 5ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.