அசானி தீவிர புயல், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கே தெற்கே சுமார் 200 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அசானி தீவிர புயல், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கே தெற்கே சுமார் 200 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு வெகு அருகில் வந்து பின்னர், வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் நாளையும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.