தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 7 கோடியே 57 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்த வலியுறுத்தி வருமான வரித் துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015-ஆம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் எஸ்ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வருமான வரித் துறையின் விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.