கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் “ டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். 3 பிரிவுகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்று கடந்த 9 ஆண்டுகளாக எனக்கிருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறேன். தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வழிநடத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டுவரை இந்த முறைதான் இந்திய அணியிலும் இருந்தது. டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
3 பிரிவுகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்துள்ளார்.
வெற்றிகரமான கேப்டனாக கோலி வலம்வந்தாலும், குறிப்பாக ஐசிசி தொடர்பான எந்த முக்கியப் போட்டியிலும் இந்திய அணிக்கு கோலியால் கோப்பையைவென்று கொடுக்க முடியவி்ல்லை. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்கள் குறித்தும் பிசிசிஐக்கு கோலி மீது கடும் அதிருப்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்கு 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியவில்லை. இது கோலியின் கேப்டன்ஷிப் மீதான அழுத்தத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. 45 டி20 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 14 தோல்விகளையும் கண்டுள்ளார். 2 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை.
இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவி்க்கப்படவில்லை.
விராட் கோலியின் முடிவு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விடுத்து அறிக்கையில் “ இந்திய அணியின் உண்ைமயான சொத்து விராட் கோலி, உறுதியான தலைமையாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். அனைத்துப் பிரிவுகளில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கோலி இருக்கிறார்.
விராட் கோலி டி20 கேப்டன் பதிவியிலிருந்து டி20 உலகக் கோப்பைக்குப்பின் விலகுவது என்பது, இந்திய அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவாகும்.
இந்திய டி20 அணிக்கு மிகச்சிறந்தமுறையில் கேப்டனாக செயல்பட்ட கோலிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகச் செயல்படவும் பிசிசிஐ வாழ்த்துகிறது, இந்திய அணிக்காக அதிகமான ரன்களைச் சேர்ப்பார் என நம்பிக்கை கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில் “ இந்திய அணிக்கு எங்களிடம் தெளிவான செயல்திட்டம் இருக்கிறது. பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, மிகவும் சுமூகமான முறையில் கேப்டன் பதவி மாற்றப்பட்டுள்ளது. டி20உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய டி20 அணியின் கேப்டன் பதிவியிலிருந்்து கோலி விலகுவார். கடந்த 6 மாதங்களாக கோலியுடன் தொடர்ந்து நடத்திய ஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.