விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரு கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று திரளான சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். மேலும், வழிப் பாதையும் தெரியாத சூழலில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்தனர். ஏரியில் திரளான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். சாலையோரக் கடைகளில் விற்பனை திருப்திகரமாக இருந்ததால், வியாபாரிகள் மகிழ்வுற்றனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் நேற்று மதியம் ஆங்காங்கே மழை பெய்தது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து, குளுமையான சீதோஷ்ண நிலை நீடித்தது.