அனைவருக்கும் தடுப்பூசி நிலையை விரைவில் தமிழ்நாடு அடையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி துவக்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்? “அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது. இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சரும் இவ்வளவு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதில்லை. ஆனால் நம் மாநில முதலமைச்சர் கட்டுமானத் தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக துவக்கி வைத்திருக்கிறார்.
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளைத் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை விடுத்த உடன், உடனடியாக 3 புதிய பாடப்பிரிவுகளை துவக்க அனுமதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி. 10 புதிய பாடப்பிரிவுகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதற்கட்டமாக B.A., Public Administration, B.Com., Statistics உள்ளிட்ட 3 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் விரைவில் மேலும் சில பாடப்பிரிவுகளும் புதிதாக உருவாக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் 90.11% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும், நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, கல்லூரிகளுக்கே வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தினந்தோறும் அதிகாலையில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று என்னிடம் கேட்கிறார் முதலமைச்சர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலையை விரைவில் தமிழ்நாடு அடையும்.” என்று கூறியுள்ளார்.