டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தன்னுடைய பெயர் இடம்பெறாதது குறித்து கேரளாவைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கேப்டன் / விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் ஏமாற்றமடைவதற்கு என்ன இருக்கிறது? அவரால் ரசிகர்களும் இந்திய அணித்தேர்வுக்குழுவும்தான் ஏமாற்றமடைந்துள்ளது. 10 டி20 சர்வதேச போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை அவர் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை, இத்தனைக்கும் அவரை கேப்டன் முன் கூட்டியே இறக்கி விட்டார். 10 டி20 இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சனின் ஸ்கோர் இதுதான்: 19,6, 8, 2 , 23, 15, 10, 27, 7, 0. மொத்தமே 117 ரன்கள்தான். ஸ்ட்ரைக் ரேட்டும் 110 தான். எந்த அடிப்படையில் தன்னை தேர்வு செய்யாதது ஏமாற்றம் என்று அவர் கூறுகிறார் என்பது புரியவில்லை.
புதிதாக வந்த இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் போன்றோர் அறிமுகத்திலேயே அரைசதம் காணும்போது மொத்தம் 10 மேட்ச்கள் வாய்ப்பு கொடுத்தாகிவிட்டதுஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை, இவர் புலம்புவதில் நியாயம் இருக்கிறதா என்றால் இல்லைஎன்றுதான் கூற முடியும். ஜிம்பாப்வேயோடு 19 அடிக்கிறார், இவரை என்னவென்று சொல்வது? இலங்கைக்கு எதிராக 6, 27, 7, 0. முதலில் அணியில் தேர்வு செய்வார்களா என்பதே சந்தேகம் பிறகுதானே உலகக்கோப்பை தேர்வு?
சரி போகட்டும்! அவர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்: “டி20 உலகக்கோப்பை தேர்வு முடிந்து விட்டது, இது ஒரு சவுகரியம். அது ஒரு பெரிய கவனப்பிறழ்வாக இனி இருக்காது. எனவே நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் முழு ஆற்றலையும் கொண்டு வர முடியும். உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகாதது உண்மையில் ஏமாற்றம்தான். எந்த ஒருவருக்கும் உலகக்கோப்பைக்காக இந்தியாவுக்கு ஆடுவதுதான் கனவாக இருக்க முடியும். நானும் எதிர்பார்த்தேன். எனினும் அது என் கையில் இல்லை. எனவே நம் கட்டுப்பாட்டில் எது இருக்கிறதோ அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும். இந்தச் சிந்தனை முதிர்ச்சி அவசியம்.
கடந்த ஆண்டு யுஏஇயில் ராஜஸ்தான் அணி 8ம் இடத்தில் முடிந்தது. இந்த முறை நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன், கோப்பையை வெல்வது என்ற லட்சியம் இருந்தாலும் ஒரு போட்டியில் கவனம் செலுத்தி வெல்வது அவசியம் என்று கூறியிருக்கிறேன். மீண்டும் 8ம் இடத்தில் முடிந்தாலும் பிரச்னையில்லை. ஆனால் 100% ஆட வேண்டும். செய் அல்லது செத்து மடி அணுகுமுறைதான் இந்த முறை. அனைவரிடத்திலும் இந்த கடமையுணர்வு வேண்டும் என்று கூறிவிட்டேன்.
மீதமுள்ள 7 போட்டிகளில் அதிகப் போட்டிகளை வெல்ல வேண்டும், இதுதான் குறிக்கோள். பிளே ஆஃபுக்கு தகுதி பெறுவது மட்டுமல்ல கோப்பையை வெல்ல வேண்டும்” என்றார் சஞ்சு.