ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தலிபான்கள் தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அல் அரேபியா வெளியிட்ட செய்தியில், “ஆப்கனில் உள்ள பத்திரிகையாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள். நம்பிக்கையற்று இருக்கிறார்கள். 20 வருடமாகக் கட்டி எழுப்பிப்பட்ட அனைத்தும் தீர்ந்துவிட்டன என அங்குள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் துபான் ஓமர் என்ற பத்திரிகையாளர் தலிபான்களால் கொல்லப்பட்டார்.
மேலும், பத்திரிகையாளர்களிடமிருந்து கேமரா மற்றும் பல உபகரணங்கள் தலிபான்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போராட்டங்களைப் பதிவு செய்யவும் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் பெண்களையும் தலிபான்கள் தாக்குகின்றனர்.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.