பீஜிங்: கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி டேட்டாவின் படி விமானம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்தனர். எவருமே உயிர் பிழைக்கவில்லை.

இந்த விமானம் கீழே விழுந்த போது செங்குத்தாக கீழ் நோக்கிப் பாய்ந்ததால் அது விபத்துதானா இல்லை ஏதேனும் சதியா என்ற ஊகங்கள் எழுந்தன. போயிங் விமான விபத்திற்கு மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு , தீவிரவாத தாக்குதல், பைலட்டின் உடல் நலமின்மை, தற்கொலை இவற்றில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டது. கருப்புப் பெட்டியை ஆய்வு முடிவில் இது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவான விவரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தை இயக்கும் பைலட்டுகளுள்ள காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவரே விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும் கருப்புப் பெட்டி ஆய்வு உணர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான செய்தி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை செலுத்திய முதன்மை பைலட் 6,709 மணி நேரங்கள் விமானத்தை ஓட்டிய அனுபவம் உடையவர். முதல் துணை விமானிக்கு 31,769 மணிநேரம் பயணம் அனுபவம் உள்ளது. இரண்டாவது துணை விமானிக்கு 556 மணிநேரம் பறந்த அனுபவம் உள்ளது. பைலட்கள் அனைவரும் இளைஞர்கள் அவர்கள் விமானத்தை செலுத்துவதற்கான அனைத்து திறனையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பைலட்டுகள் மீதே சந்தேகப் பார்வை திருப்பப்பட்டுள்ளது. இருப்பினும் போயிங் கோ, என்ற ஜெட் விமான தயாரிப்பு நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மார்ச் மாதம் போயிங் விமானம் விபத்துக்குள்ளான பிறகு ஏப்ரல் பிற்பாதியில் தான் 737-800 ரக போயிங் விமானங்களை இயக்க சீன அரசு அனுமதித்தது.