இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்தத் தடை விவசாயிகளை எந்த வகையில் பாதிக்கும்? ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிப்பதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டிருக்க முடியுமா? என்பது பற்றி பார்ப்போம்.
இந்தியாவும் கோதுமை சாகுபடியும் கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. அதேசமயம் கோதுமை சாகுபடி பரப்பளவு அடிப்படையில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, கோதுமை சாகுபடிப் பரப்பளவு இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா? – ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஹெக்டோ் சாகுபடி செலவானது ரூ.2,358-லிருந்து ரூ.74,231-ஆக அதிகரித்த நிலையில், உற்பத்தியின் மதிப்பு ரூ.3,217-லிருந்து ரூ.74,308-ஆக மட்டுமே உயா்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு இம்மாநிலங்களில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், கோதுமை சாகுபடியில் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.
ஏன் விவசாயிகளுக்கு லாபம் இல்லை? – கோதுமை சாகுபடியில் குறைந்த லாபம் அல்லது இழப்பு ஏற்படுவதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இடுபொருள்களின் தொடா் விலை அதிகரிப்பால், சாகுபடி செலவு சமீப காலங்களில் கடுமையாக உயர்ந்துவிட்டது. கோதுமை மகசூல் அதிகரித்தபோதிலும் சாகுபடி செலவு உயர்வால், லாபம் கிடைப்பது அரிதாகிவிட்டது. இரண்டாவதாக கோதுமையின் மொத்தக் கொள்முதல் கணிசமாக அதிகரித்தபோதிலும், பெரும்பாலான விவசாயிகள் இப்பயிரை விற்பனை செய்வதற்கு சந்தையையே நம்பியுள்ளனர். ஆனால், சந்தை விலை பெரும்பாலான நாட்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட(எம்எஸ்பி) குறைவாக நிலவுவதால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை.
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடரும் போர் காரணமாக, சந்தையில் கோதுமையின் விலை மேலும் உயரும் என எதிர்பார்த்து விவசாயிகள் கோதுமையை விற்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது ஒன்றும் அசாதாரணமானதல்ல! கடந்த காலங்கள் போல் அல்லாமல், இம்முறை விவசாயிகள் மிகவும் அறிவுபூா்வமாக சிந்தித்து சந்தை விலை மேலும் உயரும் எனக் காத்திருப்பதில் என்ன தவறு?
அரசு என்ன செய்திருக்க வேண்டும்? – ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, அரசு இரண்டு வழிகளைப் பின்பற்றி இருக்கலாம். ஒன்று, யூக வணிகத்தைத் தடுக்கும் நோக்கில், சில நிபந்தனைகளுடன் கோதுமை ஏற்றுமதியைப் படிப்படியாகக் குறைத்திருக்கலாம். இரண்டு, விவசாயிகளின் வருமான பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு, கோதுமைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்திருக்கலாம். எவ்வாறாயினும், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இப்போது கோதுமை ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, எனவே, ஏற்றுமதித் தடையால் விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுசெய்ய, கோதுமைக்கான குறைந்தபட்ச விலையை உலகச் சந்தை விலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.