அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உலகின் மிகப் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன.

கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுத் தீயினால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மரங்களும், நிலங்களும் நாசமாகின.

இந்த நிகையில், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக உலகின் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “இந்த தீ சுமார் 2,340 சதுர கி.மீ வரை பரவியது. தீயில் 25% மட்டுமே தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.

 

 

 

இந்தத் தீயை அணைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். காட்டுத் தீ காரணமாக பூங்கா முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது” என்றனர்.

கலிபோர்னியாவில் அமைந்துள்ள யோசெமிட்டி தேசியப் பூங்கா, அங்குள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தப் பூங்காவில் உலகின் பழமையான பல சிவப்பு மரங்கள் உள்ளன. யோசெமிட்டியின் தெற்குப் பகுதியில்தான் 3,000 ஆண்டுகள் பழமையான செக்வையாஸ் மரமும் உள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் அளவில் பாதிப்பு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.