உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் இதுவரை கோலோச்சி வந்த அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விற்பனையளவில் முதல்முறை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டில் வால்மார்ட்டின் வருமானம் 566 பில்லியன் டாலர்; அமேசானின் வருமானம் 610 பில்லியன் டாலர். ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் வால்மார்ட்டின் வருமானம் 24 பில்லியன் டாலர் உயர்ந்துதான் இருக்கிறது. ஆனால், அமேசானின் வருமானமோ 200 பில்லியன் டாலர் உயர்ந்திருக்கிறது.
1990-ம் ஆண்டிலிருந்து சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட்தான் முதலிடம் வகித்துவந்தது. அதை இவ்வாண்டு அமேசான் தகர்த்திருக்கிறது. அதற்குக் காரணம் உலகெங்கும் வியாபித்திருக்கும் கரோனா தொற்றுதான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பல மாதங்கள் தொடர்ந்தும் அவ்வப்போதும் உலகடங்கு இருந்துவந்த நிலையில் சிறிய அளவிலான கடைகள் மட்டுமல்லாமல் வால்மார்ட் போன்ற பெரிய அளவிலான கடைகளின் விற்பனையும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் நுகர்வோர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஆன்லைன் கடைகளை நோக்கி நகரத் தொடங்கினர். அமேசான் இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஆனால், தற்போது நாம் பார்க்க இருப்பது அமேசானின் வெற்றியை அல்ல. தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் வால்மார்ட்டைப் பற்றி. குறிப்பாக, அதற்கான திட்டங்களை வகுத்துவரும் வால்மார்ட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு தென் இந்தியரைப் பற்றி. சில்லறை வர்த்தகத்தில் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க வால்மார்ட் நிறுவனம் அதன் தொழில்நுட்பத்தில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்துவருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் வால்மார்ட்.காம், வால்மார்ட் குரோசரிக்கான செயலிகள் ஒன்றிணைக்கப்பட்டதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும் செயல்பாடு எளிதாக்கப்பட்டது. அதேபோல் தற்போது, ஆஃப்லைன் வர்த்தகத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு திட்டங்களை வகுத்துவருகிறது வால்மார்ட்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் முழுமையாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ பொருட்களை வாங்குபவர்களாக இல்லை. பொருட்களைப் பொருத்து அவர்கள் தேர்வு மாறுபடுகிறது. சிலபொருட்களை ஆன்லைனிலும் சில பொருட்களை ஆஃப்லைனிலும் வாங்குகின்றனர். எனவே, இனி அவை இரண்டுக்கும் இடையே பாலம் அமைப்பதுதான் சில்லறை வர்த்தக் துறையை அடுத்தத் தளத்துக்கு இட்டுச் செல்லும் என்ற முடிவுக்கு வால்மார்ட் வந்திருக்கிறது. அதற்கேற்ப தன்னுடைய தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
ஆன்லைன், ஆஃப்லைனுக்கான விநியோகச் சங்கிலி வித்தியாசமானது. அதேபோல் அவை விற்பனை செய்யும் பொருள்களிலும் சேவைகளிலும் கூட வேறுபாடுகள் உண்டு, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கும்போதும் கடைக்குச் சென்று வாங்கும்போதும் அவர்களுடைய பழக்கங்கள் வித்தியாசப்படும். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தொழில்நுட்பரீதியில் தீர்வு காண்பதுதான் தற்போது வால்மார்ட்டின் முன்னால் இருக்கும் சவால்.
தென் இந்தியரான சுரேஷ் குமார்தான் இவற்றுக்கெல்லாம் மூளையாக செயல்படுகிறார். பெங்களூரில் வளர்ந்த தமிழரான சுரேஷ் குமார், வால்மார்ட்டின் உலகத்தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (CTO), தலைமைமேம்பாட்டு அதிகாரியாகவும் (CDO) பொறுப்பு வகிக்கிறார்.
உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் எதையும் இவர் விட்டு வைக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு, ஐபிஎம், அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகள் வகித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு வால்மார்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் பெங்களூரில் பள்ளிப் படிப்பும், சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்கும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இப்போது வால்மார்ட்டை அமேசான் விற்பனையில் முந்திவிட்ட நிலையில் வால்மார்ட்டின் கடை சார்ந்த ஆஃப்லைன் வர்த்தகத்தையும் இப்போது வளர்ச்சிப் பாதையில் இருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தையும் ஒன்றிணைத்து வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கும் பொறுப்பு சுரேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இத்துறை சார்ந்த அனைவரின் பார்வையும் தற்போது சுரேஷ் குமார் மீது குவிந்திருக்கிறது.
1962-ம் ஆண்டு சாம் வால்ட்டனால் ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட், ஒரு தென் இந்தியரின் தலைமையில், சில்லறை வணிகத்தில் மீண்டும் முதலிடத்துக்கு வருமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.