உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல் ஜாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 1.505 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கல்லின் மொத்த எடை 7,525 கேரட். இதனை கின்னஸ் உலக சாதனை தளம் உறுதி செய்துள்ளது.
ஜாம்பியா நாட்டில் உள்ள காப்பர்பெல்ட் மாகாணத்தின் ‘ககும்’ என சுரங்கத்தில் இருந்து இந்த மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புவியியல் ஆராய்ச்சியாளரும், இந்தியருமான மனேஸ் பேனர்ஜி மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் தங்கள் குழுவினருடன் இணைந்து இதனை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மிகப்பெரிய மரகத கல்லுக்கு ‘சிபெம்பேலே’ என உள்ளூர் மக்களின் மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. காண்டாமிருகம் என்பதுதான் அதன் அர்த்தமாம்.
ஏனெனில், இந்த மரகத கல்லின் மேல்பக்கத்தில் காண்டாமிருகத்திற்கு இருப்பதை போலவே கொம்பு போன்ற வடிவம் உள்ளதாம். இதே சுரங்கத்தில் இருந்து கடந்த 2010 வாக்கில் 1.245 கிலோகிராம் எடை மற்றும் கடந்த 2018 வாக்கில் 1.131 கிலோகிராம் எடை கொண்ட மரகத கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கம் ஜாம்பியா அரசுக்கும், ஜெம்பீல்ட் எனும் நிறுவனத்திற்கும் சொந்தமானதாம். சிபெம்பேலே மரகத கல் தரமான வகையை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேல் நிறுவனம் ஒன்று ஏலத்தில் வாங்கி உள்ளது. அதை வாங்கிய அந்த நிறுவனம் இந்த கல் உலகின் மிகப்பெரிய மரகத கல்லாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என எண்ணி கின்னஸ் உலக சாதனைக்காக சரிபார்க்க அனுப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட உறுதிக்கு பின்னர் இந்த கல் இயற்கையானது என்பது உறுதியாகி உள்ளது. அதன் காரணமாக இப்போது உலகின் மிகப்பெரிய மரகத கல்லாகவும் அறியப்படுகிறது.