மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்தையடுத்து, 2016ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளினிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் ரஜினி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதன்பிறகு அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று குறைந்ததால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ரஜினி அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 9) அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார். அதிகாலையிலேயே சென்னை விமான நிலையத்தில் குவிந்த அவரது ரசிகர்கள் அவரை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்ததாக கூறினார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ரஜினி சென்னை திரும்பியவுடன் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.