தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்படும் நகைச்சுவை வித்தகர், 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் கொண்டாடுகிறது என்று சொல்வதே இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். அவர் திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான ‘ராமன் எத்தனை ராமனடி’ கவுண்டமணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே ‘சர்வர் சுந்தரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் இயக்குநர் இமையம் பாரதிராஜாவின் அறிமுகப்படமான ’16 வயதினிலே’ படத்தில் பிரதான எதிர்மறைக் கதாபாத்திரமான பரட்டையின் (ரஜினிகாந்த்) கூட்டாளியாக நடித்ததும் ‘பத்த வெச்சிட்டியே பரட்ட’ என்னும் வசனமும் கவுண்டமணியின் முகத்தையும் பெயரையும் ரசிகர்கள் மனங்களில் பதியவைத்தன.