“ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்களது இடைநீக்கத்தைத் திரும்பப்பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து அவர்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதைக் கேட்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-வது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது.