திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷூடன் ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அமைச்சர் எ.வ. வேலுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டுவந்த தேமுதிக, முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிகவுக்கு ஒரு எம்.பி. பதவியும், 7 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். பிறகு, 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார்.

2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் போனது தேமுதிக. 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டிருந்தது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் முதல் முறையாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ”தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்விக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பதில் வழங்கியுள்ளோம். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
விஜயகாந்த் இருக்கும்போதே 2016 இல் அமைய வேண்டிய கூட்டணி இது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அப்போது கருணாநிதி கூறினார். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு குழு அமைத்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்த பிறகு, தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
இன்றிலிருந்து திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளோம். எங்களின் கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினுடனை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பிரேமலதா பதிவிட்டுள்ளார். அதில், ”முத்தமிழறிஞர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக!” எனப் பதிவிட்டுள்ளார்.