6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி.!

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி.!

டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பு:இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா – குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

இதையடுத்து, 22 ரன்களில் பெரேரா விக்கெட்டை இழந்து களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். இதற்கிடையில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த பதும் நிஷங்கா 8 பவுண்டரிகளுடன் 62 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பவன் ரத்னநாயக 44 ரன்களை சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முசரபானி, பிராட் எவான்ஸ் மற்றும் கிரேம் கிரிமர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னெட்-மருமணி இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மருமணி 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பர்லும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் பிரையன் பென்னெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினார்.

இதில் பிரையன் பென்னெட் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கேப்டன் சிக்கந்த ரஸா 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. இதில் டோனி முனியங்கா கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இதுதவிர, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி தங்களின் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்த உத்வேகத்துடன் சூப்பர் 8 சுற்றை எதிர்கொள்கிறது.