“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில்,
‘‘டொனால்டு ட்ரம்ப் தனது, “தவறான நம்பிக்கைகளால்” மேற்காசிய பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார்.
தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது. ஈரானிய ஆயுதப்படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இந்த பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அலி லாரிஜானி அதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்திய பிறகும் ஈரானின் அணுசக்தி திட்ட்த்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஐ.ஏ.ஈ.ஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.
