தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர் வீடுகளில் சோதனை

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர் வீடுகளில் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவெ கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடத்தப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெறும் தகவலறிந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முன்னணி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே.என்.நேருவின் வீட்டின் முன்பாக குவிந்து வருவதால் திருச்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூல் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டசபை கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே, முன்னாள் அமைச்சர் நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டசபை எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டசபை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழக மக்கள் நன்கறிவர்.

இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.