காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு அசன் மவுலானாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த நிலையில், தேர்தல் செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, 2023-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கும் பதிலளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி, அசன் மவுலானாவுக்கு எதிராக தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அசன் மவுலானாவுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தினால் தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் என்ற உச்சவரம்பை மீறி அசன் மவுலானா தேர்தல் செலவு செய்ததாகவும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசாரணைகளுக்கு ஆஜராகி விளக்கம் தெரிவிக்கவில்லை என்றும் தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அசன் மவுலானா. இவரின் தந்தை ஜே.எம். ஹாரூன் ரஷீத் முன்னாள் பார்லிமென்ட் எம்பி ஆவார். இவர் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ள ஒரு தொழிலதிபர் மற்றும் நில உரிமையாளர் ஆவார். மேலும், இவர் தமிழக இளைஞர் காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுலானா கூறும்போது, ’’பாஜவுக்கு என் மேல் என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை; கண்டிப்பாக நீதிமன்றம் செல்வேன். இந்திய நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. என் மீதான நடவடிக்கை பழிவாங்கும் அரசியல்” என்றார்.
