பிரவீண் சக்ரவர்த்தி – செல்வப்பெருந்தகை இடையே பனிப் போர்: தமிழக காங்கிரசில் பரபரப்பு

பிரவீண் சக்ரவர்த்தி – செல்வப்பெருந்தகை இடையே பனிப் போர்: தமிழக காங்கிரசில் பரபரப்பு

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீண் சக்ரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இடையே தொடர்ந்து வரும் கருத்து மோதல், தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தினரும், காங்கிரஸ் கட்சியினரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால், அவர்தான் பிரதமராக வேண்டும் என்பதை கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கூட்டணியில் ஏன் தொடர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரவீண் சக்ரவர்த்தி, கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க செல்வப்பெருந்தகை யார்? என்றும், அவர் இதற்கு முன்பு என்னவாக இருந்திருந்தாலும், தற்போது அதற்கு அவசியம் இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்து, பிரவீண் சக்ரவர்த்தியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணி எதற்கு என்பதே தனது கேள்வி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தை தீர்மானிக்காது என்றும், இயக்கத்திற்காக மேற்கொண்ட உழைப்பும் அர்ப்பணிப்புமே அரசியல் உயரத்தை தீர்மானிக்கும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடவும், பதவிகளைவிடவும் அதன் கொள்கைகளால் பெரியது என்றும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் தொண்டன் தான் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரவீண் சக்ரவர்த்தி மற்றும் செல்வப்பெருந்தகை இடையேயான இந்த தொடர் கருத்து மோதல், தமிழக காங்கிரஸில் உட்கட்சி கருத்து வேறுபாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.