திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி (அதாவது இன்று) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் இன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப் படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ – விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா, ‘அண்ணா விருது’ – சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ், ‘கலைஞர் விருது’ – துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, ‘பாவேந்தர் விருது’ – மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, ‘பேராசிரியர் விருது’ – தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி, ‘மு.க.ஸ்டாலின் விருது’ – இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘2026-ம் ஆண்டுக்கான ‘முரசொலி செல்வம் விருது’ ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
