இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய படமான காளி போஸ்டரால் சட்டப்பூர்வ புகாரை எதிர்கொண்டுள்ளார். அவரது காளி என்ற படத்தின் போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதில் ஒரு பெண், இந்து தெய்வமான காளி போல் உடையணிந்து, சிகரெட் புகைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டல், காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், இந்து தெய்வத்தை அவமதித்ததாகவும் தங்கள் மத உணர்வுகளை லீனா மணிமேகலை புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், இண்டிபெண்டெண்ட் திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் – சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய மாடத்தி என்ற திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதில், ’காளி’ போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் LGBT கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் ட்விட்டரில் வெளியான சில நிமிடங்களிலேயே எதிர் வினைகளைப் பெற துவங்கியது.