மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை அணி. ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி இந்த சீசனை 4 வெற்றி, 10 தோல்விகளுடன் நிறைவு செய்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “ஆட்டத்தை புரிந்துகொண்டு விளையாட வேண்டும். நாங்கள் சில விக்கெட்களை இழந்ததால் மொயின் அலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாட வேண்டியது இருந்தது. விக்கெட்கள் வீழ்ந்த போது பங்கும், பொறுப்பும் மாறியது. அந்த சூழ்நிலையில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்திருந்தால் இந்த இலக்கை கூட கொடுத்திருக்க முடியாது. இருப்பினும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக சேர்த்துவிட்டதாகவே கருதுகிறேன்.
பேட் செய்வதற்கு சிறப்பாக இருந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை சிறப்பாக தொடங்காவிட்டால் 180 ரன்கள் குவித்திருந்தாலும் அது போதாது. இளம் வீரர்களில் முகேஷ் சவுத்ரி விரைவாக கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் காண விரும்புகிறார். இதுதான் இளம் வீரர்களுக்கு தேவை. அடுத்த சீசனில் அவர்கள், புதிதாக தொடங்குவது போன்று இருக்கக்கூடாது. எங்களது மலிங்காவை (பதிரனா) தேர்தெடுப்பது கடினமாக இருந்தது. அடுத்த ஆண்டு அவர், எங்களுக்காக பெரியளவில் பங்களிப்பு செய்வார்.
பகுதி வாரியாக இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்ஸ்மேனோ, பந்து வீச்சாளரோ யாராக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு வருட போட்டி அல்ல, நீங்கள் வருடா வருடம் திரும்பி வருகிறீர்கள். அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு வீரராகத் தொடர்வது முக்கியம்” என்றார்.