கேஜிஎஃப் 2 Vs பீஸ்ட் ரிலீஸ் மோதல் குறித்து பேசியுள்ள நடிகர் யஷ், ‘இது ஒன்றும் தேர்தல் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.
யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு, அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‘கேஜிஎஃப்’ 2 vs நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மோதிக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகர் யஷ் கொடுத்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது. யஷ் பேசுகையில், “ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வந்தால் இதுபோன்று சொல்லப்படுகிறது. இது கேஜிஎஃப் Vs பீஸ்ட் என்பது கிடையாது. இதனை கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் என்றுதான் பார்க்க வேண்டும். இது ஒன்றும் தேர்தல் கிடையாது. தேர்தலில் தான் ஒருவரின் வாக்கை வாங்க சண்டை நடக்கும். இது சினிமா. சினிமாவில் என்னுடைய படத்தையும் பார்க்கலாம். விஜய் சாரின் படத்தையும் பார்க்கலாம். இத்தனை நாளாக மக்களை என்டர்டெயின் செய்து விஜய் சார் ஒரு பெரிய ஸ்டாராக உள்ளார். நாம் அனைவரும் அவரை மதிக்க வேண்டும். அவர் எனக்கு சீனியர். அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு.
நாங்கள் ஒரு பான் இந்தியா படத்தை எடுத்துள்ளோம். மேலும், 8 மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். எந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று அப்போது எங்களுக்கு தெரியாது. எனவே கேஜிஎஃப் vs பீஸ்ட் ஒப்பிடுவதை விட இரண்டு படங்களையும் பார்க்கலாம். நானும் அந்தப் படத்தை பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்களுக்கு கேஜிஎஃப் நிச்சயம் பிடிக்கும். அனைவரும் சேர்ந்து இரண்டு படங்களையும் பார்த்து இந்திய சினிமாவை கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’, ‘கேஜிஎஃப் 2’ படம் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்பு ஏப்ரல் 13-ம் தேதி ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.