“ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் எனது புதிய படத்தை பாதிக்கலாம்” என்று நடிகர் வில் ஸ்மித் கவலையுடன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, “ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?” என்று நகைச்சுவை தொனியில் கேட்டார். இதனால் கோபம் அடைந்த வில் ஸ்மித், மேடையில் விர்ரென நடந்து சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இக்காட்சி நிகழ்ச்சிக்காக சித்தரிக்கப்பட்டது என ஆஸ்கர் விருது விழா அரங்கில் இருந்த அனைவரும் சிரிக்க, மேடையிலிருந்து கீழறிங்கிய வில் ஸ்மித்தோ, கிறிஸ் ராக்கை நோக்கி “உங்கள் வாயிலிருந்து என் மனைவியின் பெயர் இனியும் வரக் கூடாது” என்று கோபமாக கத்தினார்.

இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வில் ஸ்மித்தின் செயலுக்கு கடும் எதிர்வினைகளும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கிறிஸ் ராகிடம் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது விழாவில் தான் நடந்துகொண்ட விதம் தனது புதிய படமான ‘இமானிசிபேஷன்’ (emancipation) வரவேற்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வில் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் வில் ஸ்மித் கூறும்போது, “இவ்விவகாரத்தில் என்னை விமர்சிப்பவர்களை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். இப்படத்தை காண அவர்கள் தயாராக இல்லை என்றால், அவர்களது முடிவை முற்றிலும் மதித்து நான் ஏற்கிறேன். ஆனால், எனது படக்குழுவை எனது செயல் பாதித்துவிட கூடாது என விரும்புகிறேன்” என்றார்.