பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியையை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குரவத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜீவா பணியாற்றி வருகிறார். பள்ளியில் அடிக்கடி குடிநீர், மின்சாரம் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மாணவிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பள்ளி தலைமை ஆசிரியை கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையிலும் மின் பிரச்னையை தீர்க்காமல் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் குடிநீர் இன்றி மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு காந்தி சிலை அருகே பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியரியையை பணியிடம் மாற்றும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் கடும் வெயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு பள்ளிப்பட்டு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியையை பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் அனைவரும் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.