மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வென்றுள்ளது.
வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெறுகிறது.
இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.
இருந்தும் 65 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணியின் டாப் 5 வீராங்கனைகள் விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்மிருதி மந்தனா, மேக்னா மற்றும் ரோட்ரிகஸ் இதில் அடக்கம். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 12 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிச்சா கோஷ், 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை எடுத்தது இந்தியா. அதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இருந்தாலும் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.