உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 801 கோடியாக அதிகரிக்க செய்திருக்கலாம்.
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. அதனை ஒப்பிடுகையில் தற்போது உலக மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 2050 ஆம் ஆண்டு மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும். இருப்பினும் 2050 ஆம் ஆண்டு பூமியின் மக்கள்தொகை 900 கோடியாகவும் 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரபோகிறது. என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்ரேஸ் கூறும்போது, “இந்த வேளையை பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாக நாம் எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மனித குலத்திற்கான பொறுப்பையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.” என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. எனினும் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா சில ஆண்டுகளில் மிஞ்சிவிடும் என்றும் கூறப்படுகிறது.