டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின் தாக்கம் மற்றும் தங்கத்தில் அதிகளவிலான முதலீடு காரணமாக இந்த விலையேற்றம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மொத்தமாக பணம் கொடுத்து தங்கம் வாங்குவது எளிதானதல்ல என்கிற நிலையில், ஆன்லைன் தளங்களில் டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் போன்ற முதலீடு திட்டங்களை மக்கள் நாடி வருகின்றனர். டிஜிட்டல் கோல்டு என்பவை டிஜிட்டல் வடிவில் இருக்கும் தங்கம் என குறிப்பிடலாம். அதாவது, நமக்கு தேவைப்படும் போது இதனை விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றி பெற்றுக்கொள்ளலாம்.

இதன் காரணமாக மொபைல் செயலி மூலம் 10 ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி பல நகைக்கடைகளில் 11 மாதங்கள் வரை தங்கத்தில் பணம் முதலீடு செய்து 12ஆவது மாதத்தில் தங்க நாணயமாகவோ அல்லது ஆபரணமாகவோ பெறும் திட்டங்களில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என செபி எச்சரித்துள்ளது.

கட்டுப்பாடற்ற ஆன்லைன் தளங்களால் வழங்கப்படும் “டிஜிட்டல் தங்கம்” அல்லது “இ-தங்கம்” தயாரிப்புகளில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது எனவும் செபி கூறியுள்ளது. தங்கப் பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ் டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், Gold ETF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள் செபிக்கு கட்டுப்பட்டவை மற்றும் பாதுகாப்பானவை என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தெரிவித்துள்ளது. நாட்டில் ஆன்லைன் தங்க முதலீட்டில் மக்களின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று செபி மக்களை எச்சரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.