பொதுமக்களுக்காகவும் மன்னர்களுக் காகவும் நடத்தப்பட்டு வந்த தமிழ் நாடகக் கலையை வளர்ப்பதில் சங்க காலத்தில் பாணர்களும் விறலியர்களும் புகழ்பெற்று விளங்கினார்கள். பின்னர் பொதுவியல் மரபின் நீட்சியாகத் தமிழ்க் கூத்து மரபு உருவாக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல அதிரடிச் சீர்திருத்தங் களைச் செய்து கூத்து மரபில் பலவற்றைக் கழித்துக்கட்டிச் செம்மை செய்தார் சங்கரதாஸ் சுவாமிகள். அதைச் சிறார்களுக்குத் திருத்தமான உரையாடல்களுடன் கூடிய இசை நாடகங்களாகப் பயிற்றுவித்து ‘பாய்ஸ் கம்பெனி’களுக்குத் தோற்றம் கொடுத்தார்.
இவ்வகை பாலர் நாடகக் குழுக்கள், கட்டற்று மேடையைப் பயன்படுத்திய மூத்த நாடகக் கலைஞர்களுக்குப் பெரும் சங்கடமாகவும் சவாலாகவும் மாறி வெற்றிபெற்றன. நாடகம் என்பதைக் கட்டுக்கோப்பாக நடத்திக் காட்டியதுடன் மிக முக்கியமாக நாடக மொழியில் தமிழின் ஆட்சியைத் தலைநிமிரச் செய்தார். மொழியின் கொச்சைகளைக் களைந்து நீக்கினார்.