இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான 2-ஆவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் சமரி அதபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சமரி அதபத்து 31 ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா இருவரும் களமிறங்கினர்.
தொடக்கத்தில் ஸ்மிருதி மந்தனா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஷபாலி வர்மா ஜெமிமா இருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா அரைசதமடித்தார். மறுபுறம் ஜெமிமா 26 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடினார். இறுதியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply