துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்தான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் நேற்று அறிவித்தார். இந்தக் கூட்டணியின் முதல் பொதுச் செயலாளர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டணியின் முதலாவது மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹக்கான் ஃபிதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கூட்டணிக்கான நிறுவன கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் செயல்பாடுகளுக்கான நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கூட்டணிக்கான செயலகம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல் பொதுச் செயலாளர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களில் இருந்து நியமிக்கப்படுவார் என்றும், கூட்டணியை நிறுவன ரீதியாக வலுப்படுத்துவது, எப்போது, எவ்வாறு அதன் செயல்பாடுகளை தொடங்குவது என்பது குறித்தும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஃபிதான் தெரிவித்தார்..
பிராந்தியத்தில் பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான சூழலை உருவாக்குவதே கூட்டணியின் நோக்கம். பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை போன்ற சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணி செயல்படும். இந்தக் கூட்டணி எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தக் கூட்டணியில் பிற நாடுகளும் இணைந்து பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான சில நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் இருக்கும். கூட்டணி விரிவடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நாடுகள் இணைவதற்கு முன்பாக அதன் நிறுவன கட்டமைப்பு முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும்.
இந்தக் கூட்டணி, உறுப்பு நாடுகள் ஏற்கனவே கொண்டுள்ள பிற ஒப்பந்தங்கள் அல்லது பாதுகாப்பு கூட்டணிகளின் கீழான பொறுப்புகளை நீக்காது என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான பொறுப்பை ஏற்க துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா தயாராக இருப்பதை இந்தக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
முதலாவது கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆகியோர் பங்கேற்றனர். துருக்கி சார்பில் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான், தேசிய பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேர் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் செல்சுக் பய்ரக்தரோய்லு ஆகியோர் கலந்து கொண்டனர். சவுதி அரேபியா சார்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் ஃபயாத் பின் ஹமத் அல்-ருவைலி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
