புதிய கோள்கள், பிரபஞ்ச ரகசியங்கள் அறிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ஏவியது ‘நாசா’

புதிய கோள்கள், பிரபஞ்ச ரகசியங்கள் அறிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ஏவியது ‘நாசா’

வாஷிங்டன்: புதிய கோள்களை கண்டறிதல், பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இருள் ஆற்றல் குறித்த ஆய்வு உட்பட பல ஆராய்ச்சி பணிகளுக்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ உருவாக்கியுள்ள, 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் பகுதிகளை மிகப் பரந்த அளவில் ஆய்வு செய்யும் வகையில் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. நாசாவின் முதல் தலைமை வானியலாளரான மறைந்த நான்சி கிரேஸ் ரோமனின் பெயர் இந்த தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களின் ஒளியை மறைத்து அவற்றைச் சுற்றி வரும் மங்கலான கோள்களை நேரடியாகப் படம் பிடிக்க உதவும் பரிசோதனை கருவியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், பிரபஞ்சத்தின் மொத்த உள்ளடக்கத்தில் 90 சதவீதத்திற்கு மேல் இருக்கும் இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றல் ஆகியவை குறித்தும் ரோமன் தொலைநோக்கி மூலம் பதில் தேட முடியும்.

இருள் பொருள் என்பது ஒளியை வெளியிடவோ, பிரதிபலிக்கவோ, உறிஞ்சவோ செய்ய முடியாததாக கருதப்படும் ஒரு வகை பொருள். அதனால் நேரடியாக தொலைநோக்கியில் பார்க்க முடியாது. ஆனால் அதன் ஈர்ப்பு விசையை கணிக்க முடிகிறது. இருள் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகமடைவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ரோமன் தொலைநோக்கி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஒரு பஸ் அளவிற்கு பெரிதான இந்த தொலைநோக்கி பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள தன் ஆய்வு நிலையை சென்றடைய மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகும். இதே பகுதியில் நாசாவின் மற்றொரு முக்கிய விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப்’ செயல்பட்டு வருகிறது.