டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில், அணையின் நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக குறைக்கப்பட்ட உபரி நீரின் அளவு நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கன அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பினால் அணையின் நீர்மட்டம் 90.92 அடியில் இருந்து 90.47 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 53.70 டி.எம்.சியாக உள்ளது. குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நாளை மேட்டூர் அணையை காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
