கும்பகோணத்தில் உள்ள ‘சூப்பர் யாத்ரா’ டிராவல்ஸ் நிறுவனம் மூலம், தமிழகத்தை சேர்ந்த, 57 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். ஆக., 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், அவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில், 21 பேர் தப்பித்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், அவர்கள் மீட்கப்பட்டு, காத்மண்டுவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, விமான மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை வந்தனர்.
சென்னையில் தங்க வைக்கப்பட்டவர்களில், திருச்சி, உறையூரை சேர்ந்த சிவரஞ்சனி, என்பவர் சாலை மார்க்கமாக, திருச்சி வந்தார். சிவரஞ்சனி கூறியதாவது:ஆக., 26 காலை, நேபாளத்தில் இருந்து, கைலாஷிற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, சுங்கச் சாவடிக்கு, மூன்று கி.மீ., முன், கரும் புகை போல கிளம்பியது. அதை என்னவென்று முழுமையாக, உணர்வதற்குள், 50 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
அதிர்ச்சியடைந்த நாங்கள், தப்பிக்க, பஸ்சில் இருந்து இறங்கி, அருகில் இருந்த மலை மீது ஏறினோம். எங்களுடன் வந்தவர்களில், வயதானவர்கள் மலை மீது ஏறுவதில், மிகவும் சிரமப்பட்டனர். மற்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்து, மேலே கொண்டு வந்தோம்.
பெரு வெள்ளம் எங்களை நோக்கி வந்தபோது, சாலை திரும்பும் இடத்தில் இருந்ததால், ஐந்து அடி இடைவெளியில், தப்பித்தோம். ஐந்து அடி முன்போ, பின்போ சென்று இருந்தால், நாங்களும் வெள்ளத்தில் சிக்கி இருப்போம்.
எங்களை மீட்பதற்கு முயற்சி எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எங்களுடைய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தொலைந்து விட்டன. அவற்றை மீண்டும் பெறுவதற்கு, அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
