செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது, அவசர உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

டெல்லியில் ஜந்தர் – மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தை கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை டெல்லி காவல்துறை ரத்து செய்யாததை கண்டித்து, இந்தியா கேட் முதல் டெல்லி காவல் ஆணையர் அலுவலகம் வரை செப். 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சிஜேபி பேரணியால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட நேரிடும் எனத் தெரிவித்து, ஓய்வுபெற்ற டெல்லி காவல் அதிகாரி ராஜேந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், முந்தைய போராட்டத்தை போன்று சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், காவல்துறை அனுமதியின்றி நடைபெறவுள்ள போராட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், “அனைவரும் மிகவும் பொறுப்புடனும், அமைதியாகவும், சட்டத்துக்கு உட்பட்டும் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதில் சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று முன்பே கூறுவதற்கான கட்டாயச் சூழல் எதுவும் இப்போது இல்லை” எனத் தெரிவித்தனர்.

சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படலாம் என்ற தனது கவலைகள் அல்லது குறைகள் குறித்து மத்திய அரசிடம் முறையிடுமாறு, மனுதாரரிடம் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிஜேபி போராட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் சேர்த்து, இந்த மனு மீதான விரிவான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 10-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.