ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின்  நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 3ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை  அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் வெங்கடரமணன்,  ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வரத்து குறைந்ததன் காரணமாக, வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களை சேர்ந்த நியாயவிலை கடைகளில் வருகின்ற செப்டம்பர் 3ம் தேதி முதல்  ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 விலையில்  வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.