மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே, புதுடெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதாளர்களை தனது தனது இல்லத்தில், சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களிடையே கலந்துரையாடினார்.

அப்போது அவர், ‘’செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களின் மூலம் மாணவர்கள் திரையில் அதிக நேரத்தை செலவிடுவது ஒருவிதமான அடிமைத்தனமாக உள்ளது. அந்த அடிமைத்தனம் நீங்க வேண்டுமென்றால், மாணவர்கள் விளையாட்டுகளில் தங்கள் கவனத்தச் செலவிட வேண்டும். நான் சொல்வது விடியோ கேம் விளையாட்டை அல்ல; களத்தில் விளையாடும் விளையாட்டை சொல்கிறேன்.

மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். ஒரு குழந்தை விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினால், போதை பழக்கத்தில் சிக்கி இருந்தால் படிப்படியாக அந்தப் போதையிலிருந்து விடுபடக்கூடும். குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் எவ்வளவு அதிகமாக ஈடுபடுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அத்தகைய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை வடிவமைப்பதை நாம் ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நமது மாணவர்களை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். ஆடை ஒழுங்கு பிரச்னைகளைப் பொறுத்தவரை, சில பெருநகரங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் உள்ள ஆடை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது; சில நேரங்களில் எந்த விளக்கமும் இன்றி விதிகள் திணிக்கப்படுகின்றன.

இதுமாதிரியான பிரச்னைகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதோடு, இதனால் மாணவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கும் நான் கூறுவது என்னவென்றால், பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றினைய வேண்டும். நான் உங்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்திற்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்: குழந்தைகளின் வாழ்க்கையோடு உண்மையாக இணைய நாம் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். குழந்தைப் பருவத்தை நாம் மடிய விடக்கூடாது; அதைப் பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கே மிகச் சிறந்த பங்கு உள்ளது. அக்குழந்தையின் குழந்தைப் பருவம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்வது ஒரு ஆசிரியரின் கடமையாகும்” என்றார்.