சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் சாதியின் பெயரை கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகள் பட்டியலை கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓபிசி மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி பட்டியல்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவை சாதிகள் அல்ல; வகுப்புகள் என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என தெரிவித்துள்ளார்.
1931-ம் ஆண்டுக்குப் பிறகு 95 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இமயமலைப் பகுதிகளை ஒட்டிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் சாதியின் பெயரை நேரடியாகக் கேட்டு பதிவு செய்யும் முறையால், ஒரே சாதிக்கு பல்வேறு பெயர்கள் மற்றும் அடையாளங்கள் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4,147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்கள் தங்கள் சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்பட்ட S.O. 4505(E) சட்டப்பூர்வ ஆணையை ரத்து செய்து புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
