கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு? ஈரான் ஊடகங்கள் பரபரப்பு தகவல்

கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு? ஈரான் ஊடகங்கள் பரபரப்பு தகவல்

கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தப்படுவதாக ஈரான் ஊடகங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானில் உள்ள தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், கார்க் தீவு அருகே ஏராளமான வெடிச்சத்தங்களை கேட்கப்பட்டதாகவும், தீவின் அருகே ஈரானின் டேங்கர் ஒன்றை அமெரிக்கா தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி ஈரான் அல்லது அமெரிக்காவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் வெளியாகவில்லை. இரு நாடுகளுக்கிடையே 6 மாத காலம் தொடர்ந்த போர் சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிறு முதல் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதால், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மீது இரு நாள்களுக்கு முன் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் ஒரு திருமண நிகழ்வில் குண்டுவீசிய அமெரிக்கப் படையினர், பொதுமக்கள் பலியாகக் காரணமாக இருந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு தொடர்பாக இரு நாடுகளும் போட்டியிட்டு வரும் நிலையில், பல கப்பல்களை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.