மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, 12 கால வேள்விகள் மற்றும் 184 ஹோம குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் லேசர் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் (செப்.16) காலை தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள், கொடிமரங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே இதர தெய்வ சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 7.40 மணியளவில் அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலில் உள்ள 12 கோபுரங்களின் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

இதற்காக 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின்போது மந்திரங்கள் முழங்க, ராஜகோபுரங்களின் விமானங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை நடத்தினர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டனர். கோயில் வளாகம், ஆடி, சித்திரை வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் மீது குடமுழுக்கு புனித நீர் ஸ்பிரிங்க்ளர் மூலம் தெளிக்கப்பட்டது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

குடமுழுக்கு விழாவில் பங்கேற்க 3 ஆயிரம் உபயதாரர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரம் பொதுமக்கள் உள்ளிட்ட 11 ஆயிரம் பேருக்கு பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. கோயிலின் மேல்தளத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர்.

சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூடும் பகுதிகளில் 26 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 40 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

குடமுழுக்கையொட்டி சுமார் 1 லட்சம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 70 மருத்துவர்கள், 150 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 275 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

பாதுகாப்புப் பணிகளை கண்காணிக்க 433 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 70 அதிநவீன எப்.ஆர்.எஸ். கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 40 குற்றத்தடுப்பு காவலர் குழுவினர் கோயிலைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு உதவிட கோயிலைச் சுற்றிலும் 10 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த விழாவில் பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.