மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது: அமைச்சர் வன்னி அரசு

மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது: அமைச்சர் வன்னி அரசு

மாணவர் பாரதிதாசன் கல்விக் கட்டண விவகாரத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது. உண்மையில் திமுகதான் தலித் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான்என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு குற்றஞ்சாட்டி உள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது. மாணவர் பாரதிதாசன் கோரிய முழு உதவித்தொகையும் விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசில் எப்படி விளக்கம் கேட்பார்களோ அதுபோலவே நாங்களும் மாணவரிடம் விளக்கம் கேட்டோம்.

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை விவகாரத்தில் தவெக அரசு எந்த அரசியலும் செய்யவில்லை. உண்மையில் திமுகவுக்கு தலித் மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மீதியுள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள்.

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான். வேங்கைவயலின் முரளிராஜா என்பவர் என்னிடம் மனு கொடுத்திருந்தார். திமுக அரசு தன்னை வஞ்சித்துவிட்டதாக அவர் அதில் தெரிவித்தார். காவலரான முரளிராஜா இப்போது இடைநீக்கத்தில் உள்ளார்.

இப்படி தலித் இளைஞர்கள், மாணவர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்தது திமுக அரசு. நெல்லையில் கவின் படுகொலைக்கு காரணமான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய அப்போது பலமுறை விசிக போராட்டம் நடத்தியது. ஆனால் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படவில்லை. இப்போது தவெக ஆட்சி அமைந்த பின்னர்தான் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார்.

பாரதிதாசன் விவகாரத்தில் அக்கறை இருப்பது போல திமுக நாடகம் ஆடுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் பாரதிதாசனின் கல்விக் கட்டணத்துக்கான முழு தொகையையும் அனுப்பிவிட்டோம். அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் கடந்த ஆட்சியில் என்ன நடைமுறை இருந்ததோ, அதையேதான் இப்போதும் பின்பற்றுகிறோம். இதில் எங்களுக்கு கூடுதல் அக்கறை இருக்கிறது, அந்த பொறுப்புடன் செயல்படுகிறோம். மாணவர் பாரதிதாசனின் பாதுகாப்பு, படிப்புக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என்றார்.